https://aumonerieindienne.fr/wp-content/uploads/2024/06/Cyril-400x423.jpg

ஞானகத் தந்தையின் முகவுரை

என் அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே,
பிரான்ஸ் தேசத்தில் இந்திய கத்தோலிக்க தமிழ் ஞானகத்தின் ஞானக தந்தை என்ற முறையில் நான் மட்டற்ற மகிழ்ச்சியோடு நம் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

முதலாவதாக பிரான்ஸ் தேசத்தில் நம் ஞானகம் வேரூன்ற மகத்தான காரணம் பாரிஸ் உயர்மறைமாவட்டம். 1981ம் ஆண்டு முதல் பிரான்சில் இறை பணியைத் தொடர முடிந்ததற்கு அவர்களின் அன்பான வரவேற்பும் நிலையான ஆதரவும் தான் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.

இரண்டாவதாக பாரிஸ் மறை போதக சபையின் தலைமையகம் (Société des missions étrangères de Paris) நம் ஞானகத்தின் பிறப்பிடம். 1961 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மற்றும் பாண்டிச்சேரியில் 30 ஆண்டுகள் பணிக்குப் பிறகு பாரிஸ் திரும்பிய Francis Pierre AUDIAU MEP அருட்தந்தையின் பெரும் முயற்சியால் தான் நம் ஞானகம் உருப்பெற்றது. பிரான்சில் உள்ள நமது இந்திய தமிழ் கத்தோலிக்க ஞானகம் தமிழ் பாரம்பரியம், கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் பக்தி ஆகியவற்றின் ஒரு அற்புதமான பிணைப்பு.

உங்கள் ஞானக தந்தை என்ற முறையில் உங்கள் ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்வதே எனது முதல் பொறுப்பாகும். உங்கள் அனைவருடனும் ஒத்துழைத்து பணியாற்றவும், தேவையில் இருப்பவர்களை தேடி சென்று உதவவும், நமது ஞானகத்தின் மேம்பாட்டிற்காக உழைக்கவும் நான் கடமைப்பட்டுள்ளேன். நீங்கள் சொல்வதற்கு செவிமடுக்கவும், உங்களுக்கு ஆதரவாக இருந்து உங்கள் ஆன்மீகப் பயணத்தில் உங்களுடன் பயணிக்கவும் நான் தயாராக இருக்கின்றேன்.

ஒரே இறைவனின் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நம்முடைய கத்தோலிக்க விசுவாசத்தில் உயர்வடைவோம். நமது தமிழ் பாரம்பரியத்தை மதிப்போம் மற்றும் பிரான்சின் பன்முகத்தன்மை கொண்ட சமுதாயத்துடன் ஒன்றிணைந்து இணக்கமான சகவாழ்வை நோக்கி நமது பயணம் தொடரட்டும். இந்த மேன்மை பொருந்திய பணியை நாம் தொடர ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் அன்னை கன்னி மரியாளும் நம் அனைவரையும் ஆசிர்வதித்து வழிநடத்தட்டும்.

இறைவன் என்றென்றும் வாழ்த்த பெறுவாராக !

ஞானகத் தந்தை

அருட்பணி சிரில் சாந்து